"சாதி"தான் இங்கு சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்... If caste is deemed to be society, let poison spread in the air...

Curry Leaf Tree Part Two – கறிவேப்பிலை

Curry Leaf Tree Part Two- கறிவேப்பிலை மரம் [பகுதி 2]

உணவுக்கு மதுரமான வாசனையை கொடுக்கும் கறிவேப்பிலை மரத்தைப்பற்றி தொடர்ந்து பார்த்து வருகின்றோம்.

இதன் முந்தைய பதிவான முதல் பதிவில் [Part 1] கருவேப்பிலையைப் பற்றிய அடிப்படைத் தகவல்கள், தாவரத்தின் தன்மை மற்றும் இலைகளின் தன்மையைப்பற்றி பார்த்தோம்.

அதன் தொடர்ச்சியாகிய இரண்டாவது பதிவான [Part 2] இப்பதிவில் கறிவேப்பிலை மரத்தைப்பற்றிய மேலும்பல தகவல்களை பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பார்க்கலாம்..

உணவிற்கு மதுரமான வாசனையை கொடுக்கும் இலைகளை கொண்டுள்ள கறிவேப்பிலையானது வெறும் வாசனைகளை மட்டுமல்ல அதே இலைகளில் அற்புதமான மருத்துவக் குணங்களையும் கொண்டுள்ளன.

இலைகள் மட்டுமல்ல இதன் பூக்கள், பழங்கள், பட்டைகள் என அனைத்துமே மருத்துவக் குணங்களை கொண்டவைகளாகவே இருக்கின்றன.

அஜீரணத்தை போக்கி, நச்சுக்களை நீக்கி, குருதியை சுத்திகரிக்கும் பூக்களின் தன்மைகளைப்பற்றி இப்போது பார்க்கலாம்.

பூக்களின் தன்மை

கறிவேப்பிலை என்னும் கருவேம்பு மரமானது வசந்த காலத்திலும், கோடைகாலத்தின் துவக்கத்திலும் மலர்களை உருவாக்குகின்றன. அதாவது ஜூன் தொடங்கி நவம்பர் வரை பூக்கின்றன.

பூக்கள் பூங்கொத்து வகையை சேர்ந்தது. இதன் மஞ்சரியானது “காரிம்ப்” (Corymb) வகையை சார்ந்தது.

Curry Leaf Tree buds

கிளைகளின் நுனிகளிலுள்ள மஞ்சரிகளில் 60 முதல் 90 க்கும் மேற்பட்ட வெண்ணிற சிறிய மதுரமான நறுமணத்தை கொண்ட பூக்களை மலரச்செய்கின்றன. பூவின் சராசரி விட்டம் சுமார் 1. 12 செ.மீ.

ஒரு தனிப்பட்ட பூவின் காம்புகள் மிகவும் குறுகியவை. காம்பினை அடுத்துள்ள புல்லிவட்டமானது (sepals) 1 மி.மீ நீளத்திற்கும் குறைவான அளவையே கொண்டுள்ளன. இந்த புல்லிவட்டம் பச்சை நிறத்தில் இதழ்போன்ற 5 முனைகளுடன் காணப்படுகின்றன.

புல்லிவட்டத்திற்கு அடுத்துள்ள அல்லிவட்டத்தில் (Corolla) தனித்தனியாக பிரிக்கப்பட்ட 5 பூ இதழ்கள் காணப்படுகின்றன. இந்த இதழ்களானது (Petals) வெண்மையாக நீள் வட்ட வடிவத்தில் (ஈட்டி வடிவத்தில்) காணப்படுகின்றன. ஒவ்வொரு இதழ்களும் 4 லிருந்து 7 மி.மீ நீளத்தில் உள்ளன.

அதற்கு அடுத்துள்ள மகரந்த வட்டத்தில் ஒரு இதழுக்கு இரண்டு என்ற விகிதாசாரத்தில் மொத்தம் 10 மகரந்த தாள்கள் (Stamen) காணப்படுகின்றன. இந்த மகரந்த தாள்களின் நீளம் 4 முதல் 6 மி.மீ அளவில் உள்ளன. இவைகளின் தலைப்பகுதியில் மஞ்சள் பொட்டுபோல் காணப்படும் மகரந்தமானது (Anther) மலருக்கு விஷேச அழகினை கொண்டுவருகின்றன.

bouquet of flowers

மகரந்த வட்டத்திற்கு மத்தியிலுள்ள கருப்பை (Ovary) யிலிருந்து மேலெழும்பிவரும் இலேசான பச்சை கலந்த வெண்ணிற சூல்தண்டு (Style) சுமார் 4 மி.மீ நீளத்தை பெற்றுள்ளன. இந்த சூல்தண்டின் தலைப்பகுதியில் இளம்பச்சை நிறத்தில் தொப்பி போன்ற அமைப்புடன் கூடிய வட்டவடிவ சூல்முடி (Stigma) காணப்படுகிறது. இவை எண்ணிக்கையில் ஒன்றுமட்டுமே உள்ளன.

Curry Leaf Tree Part Two – கறிவேப்பிலை காய்களின் தன்மை

ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பூக்கள் உதிர்ந்து காய்களை உற்பத்தி செய்கின்றன.

murraya_koenigii_Pods

கறிவேப்பிலையின் காய்கள் வழக்கம்போல் பச்சை நிறமாகவே உள்ளன. அதன்பின் அவைகள் நாட்கள் செல்லச்செல்ல பச்சை நிறத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக சிவப்பு நிறத்திற்கு மாறுகின்றன. அவ்வேளையில் காய்கள் பச்சையும் சிவப்பும் கலந்து ரம்மியமாக காட்சியளிக்கின்றன.

Curry leaf tree fruit

பச்சை நிறத்திலிருந்து படிப்படியாக கண்களை பறிக்கும் சிவப்பு நிறத்திற்கு மாறிய காய்கள் கனிய கனிய சிவப்பு நிறத்திலிருந்து கருப்பு நிறத்திற்கு மாறுகின்றன. அவ்வேளையில் சிவப்பும் பளபளக்கும் நாவற்பழ கருப்புமாக காட்சிதரும் பழங்கள் உண்மையிலேயே நம் உள்ளத்தை கொள்ளையடிக்கின்றன.

அதன்பின் ஓரிரு நாட்களில் அனைத்தும் கனிந்து வழுவழுப்பான தோற்றத்துடன் பளபளக்கின்றன.

கருமை நிறமான இந்த பழங்கள் பட்டாணி அளவில் பளபளப்புடன் அழகாக காட்சியளிக்கின்றன.

Indian-Curry-Leaf-Tree-fruit

இந்த பழங்கள் 10 லிருந்து 16 மி.மீ நீளமும், 10 லிருந்து 12 மி.மீ அகலத்தையும், 880 மி.கி அளவு எடையையும் கொண்டுள்ளன.

காரமான வாசனையை கொண்டுள்ள இந்த பழங்களினுள் 1 அல்லது 2 எண்ணிக்கைகளில் பச்சை நிறத்திலான விதைகள் காணப்படுகின்றன.

விதைகள் 8 மி.மீ நீளத்தையும், 7.5 மி.மீ அகலத்தையும், 445 மி.கிராம் அளவு எடையையும் கொண்டுள்ளன.

ஒரு பழத்தினுள் 1 விதை மட்டுமே இருந்தால் அவ்விதையானது மேற்கண்ட அளவுகளிலும், இரு விதைகள் இருந்தால் இருவிதைகளும் அளவில் கொஞ்சம் சிறியதாகவும் காணப்படுகின்றன.

Indian Curry Leaf seeds

விதைகளை சுற்றி லேசான ஊதாநிற சதைகள் கூழ் வடிவில் காணப்படுகின்றன. இந்த சதைகளை நாம் உணவாக உட்கொள்ளலாம். பழங்கள் உண்பதற்கு இனிமையாகவும், காரமான ஒருவித வாசனையையும் கொண்டுள்ளன.

பழங்கள் சத்து நிறைந்தவை மட்டுமல்ல. மருத்துவகுணமும் கொண்டவை. ஆனாலும் இதில் குறிப்பிட்டு சொல்லும்படி அதிக அளவு சதைப்பற்று இல்லையென்பதாலும். சதைப்பகுதியையும், விதைப்பகுதியையும் பிரித்து சாப்பிட அதிகம் பொறுமை தேவைப்படுவதாலும் யாரும் இதனை அவ்வளவாக விரும்பி சாப்பிடுவதில்லை.

ஆனால், பறவைகள் இதனை விரும்பி சாப்பிடுகின்றன. பறவைகள் மூலமாகவே தொலைதூரங்களுக்கு விதைகள் எடுத்துச்செல்லப்பட்டு இவ்வினங்கள் வேகமாக பரவுவதற்கு வழியேற்படுகின்றன.

ஆனால் பாலூட்டிகளான விலங்குகள் இப்பழங்களை சாப்பிடுவதில்லை. அதற்கான காரணங்களும் உள்ளன. அதனை பின்னால் பார்க்கலாம்.

பழத்தில் பாதிக்கும் அதிகமான பகுதிகளை விதைகளே ஆக்கிரமித்துள்ளன. பழத்தில் உண்ணக்கூடிய பகுதி 45 சதவீதம் மட்டுமே.

இந்த பழத்தில் “வைட்டமின் A” (Vitamin A) மற்றும் சுண்ணாம்பு சத்துக்கள் (Calcium) நிறையவே உள்ளன.

மருத்துவக்குணங்களுக்கும் குறைவில்லை. கருவேப்பிலை பழங்களை நன்கு அரைத்து அதனுடன் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து பூச்சிகள் கடித்த இடங்களில் தடவிவர அதன் பாதிப்புகள் அகலும்.

[100 கிராம் பழச்சதையில் அடங்கியுள்ள சத்துக்கள்]

English NameTamil NameNutrient value
Waterநீர்64. 9 %
Sugarசர்க்கரை9. 76 %
Vitamin Cவைட்டமின் C13. 35 mg
Proteinபுரதம்1. 97 g
Phosphorusபாஸ்பரஸ்0. 082 g
Potassiumபொட்டாசியம்0. 811 g
Calciumகால்சியம்0. 166 g
Magnesiumமெக்னீசியம்0. 216 g
Ironஇரும்பு0. 007 g

விதைகளின் தன்மை

Curry Leaf Tree Part Two – கறிவேப்பிலை. பிற விதைகளைப்போல் இவைகள் பாதுகாப்புக்காக கடினமான ஓடுகளை பெற்றிருக்கவில்லை. பாலித்தீன் பேப்பரைப்போல ஒளி ஊடுருவும் தன்மைகொண்ட மிக மிக மெல்லிய தோல் போன்ற அமைப்பையே கொண்டுள்ளன.

எனவே அதனுள்ளிருக்கும் பச்சைநிற இரு வித்திலைகளும் ஒளி ஊடுருவும் தன்மை கொண்ட இதன்வழியாக வெளிப்பட்டு தெரிவதால்தான் பார்ப்பதற்கு இவ்விதைகள் பச்சை நிறத்தில் காட்சியளிக்கின்றன.

Curry Leaf  tree seeds

இந்த விதைகள் இலைகளைப்போலவே காரத்தன்மை கொண்டதாகவும் ஓரளவு வாசனைகொண்டதாக இருந்தாலும் கூட இவைகள் இலைகளைப்போல சமையலுக்கு பயன்படுத்தப்படுவதில்லை. அதற்கு காரணம் விதைகளிலுள்ள உடலுக்கு தீங்கு விளைவிக்கும் சில இரசாயன மூலக்கூறுகள்.

இதன் விதைகளிலுள்ள சில ரசாயன மூலக்கூறுகள் விலங்குகள் மற்றும் மனிதர்கள் போன்ற பாலூட்டிகளின் ஜீரண மண்டலங்களில் “குடல் அழற்சி” (Appendicitis) போன்ற சில கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

கடினமான பாதுகாப்பு ஓடுகள் எதுவும் இல்லாமல் எளிமையாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இதன் விதைகள் விலங்குகளால் வீணடிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதனால் இயற்கையானது அதனை விலங்குகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள இந்த தற்காப்பு ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளது.

ஆனால் பறவைகளின் உடலில் இது எந்தவித பாதிப்புகளையும் ஏற்படுத்துவதில்லை. அதன் ஜீரணமண்டலங்களால் விதைகள் சிதைக்கப்படுவதும் இல்லை. ஏனெனில் பறவைகள் மூலமாகவே இதன் விதைகள் தொலை தூரங்களுக்கு பயணிக்கின்றன என்பதால்.

எனவே மனிதர்களாகிய நாம் இதன் பழங்களை ருசிபார்ப்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். விதைகளோடு சடுகுடு விளையாடுகிற வேலையெல்லாம் வைத்துக்கொள்ளாதீர்கள். மீறினால் இயற்கையால் தண்டிக்கப்படுவீர்கள்.

ஆம்,… தொடர்ந்து பழங்களோடு சேர்த்து விதைகளையும் உட்கொண்டுவந்தால் “இரைப்பை வறட்சி” என்னும் “இரைப்பை அழற்சி” (Gastritis) மற்றும் “குடல் அழற்சி” (Appendicitis) என்னும் வலிமிகுந்த நோயுடன் வாழ்க்கையை ஓட்ட வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிடும்.

எனவே குழந்தைகளாகட்டும் அல்லது பெரியவர்களாகட்டும் பழங்களுடன் சேர்த்து விதைகளையும் சாப்பிட அனுமதிக்கவேண்டாம். சதைகளை சாப்பிட்டுவிட்டு விதைகளை துப்பிவிட வலியுறுத்துங்கள்.

வேர்களின் தன்மை

இதனுடைய வேர்பட்டையானது சிறுநீரகங்களில் ஏற்படும் வலிகளை நீக்கும் தன்மையுடையது.

சிறுநீரகம் சம்பந்தமான வலிகளுக்கு வேர்களிலிருந்து எடுக்கப்படும் சாறு நிவாரணம் அளிக்கிறது. மேலும் இந்த வேருக்கு கெட்டிப்பட்ட மலத்தை இளக்கும் தன்மையும் உண்டு.

வேர்ப்பட்டையை ஊறவைத்த நீரை 60 மில்லி அளவு தினம் இருவேளை அருந்திவர வாந்தி நிற்கும்.

இனப்பெருக்கம்

பழங்களை விரும்பி உண்ணும் பறவைகளால் விதைகள் வெகுதூரங்களுக்கு கடத்தப்பட்டு இனப்பெருக்கம் நடைபெறுகின்றன. தற்காலங்களில் இதன் கிளைகளை ஒடித்து நட்டு வைப்பதின் மூலமாகவும் புதிய செடிகளை உற்பத்தி செய்கின்றனர்.

*******

சரி,… கறிவேப்பிலையைப்பற்றிய இந்த இரண்டாவது பதிவில் [Curry Leaf Tree Part Two- கறிவேப்பிலை மரம் [பகுதி 2]] கறிவேப்பிலை மரத்திலுள்ள பூக்களின் தன்மை, காய்களின் தன்மை, பழங்களின் தன்மையோடு பழங்களில் அடங்கியுள்ள சத்துக்களைப்பற்றி மட்டுமல்லாது விதைகளின் தன்மைகளையும் பார்த்தோம்.

அடுத்து தொடர்ந்துவரும் மூன்றாவது பதிவில் [Part 3] இதன் இலைகளில் அடங்கியுள்ள சத்துக்களின் விபரங்களோடு இம்மரத்தின் மருத்துவ பயன்பாடுகளைப் பற்றியும் பார்க்க இருக்கின்றோம்.

இதன் மூன்றாவது பகுதியை [Part 3] படிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள விஷீவல் லிங்க் (visual link) ஐ உங்கள் விரல்களால் சட்டுன்னு தட்டுங்க பட்டுன்னு திறக்கும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
error: Content is protected !!